அவங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க!

மழலைகளின் புன்சிரிப்பு, மணம் வீசும் மலர், மேகம் திரண்டு பொழியும் மழை, கோடை மழையில் சிதறும் ஆலங்கட்டி, மார்கழி மாத சூரியன், சித்திரை நிலவு, முளைவிட்டு வரும் வித்து, அறுவடைக்கு காத்திருக்கும் மணம் வீசும் நெல், நீர்நிலைகள் என்று கண்களுக்கும், காட்சிக்கும் விருந்தளிக்கும் விஷயங்களை நாளெல்லாம் பட்டியலிட்டுக் கொண்டிருக்கலாம்.

இந்த பட்டியலில் புதுமணத்தம்பதிகளுக்கும் இடம் உண்டு. ஆமாங்கோ! புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க.
நாணிக் கோணும் புதுப்பெண்ணும், மருண்ட விழிகளுடன் புது மாப்பிள்ளையும், நட்புகளின் கேலிகளுடன் கசாப்புக்காரன் கையில் மாட்டிய ஆடு போல காட்சி அளிக்கும் புதுமண தம்பதியர் இன்றைய நவினயுகத்தில் காண அரிதான காட்சிகளில் ஒன்றாகும். அத்திப்பூத்தார் போல அங்கொன்றும் இங்கொன்றுமாய் முகூர்த்த காலங்களில் தென்படுகின்றனர்.

எல்லா இடங்களிலும் நவீனத்துவம் படையெடுத்தப்பின்பு இன்னும் வெட்கிச்சிவக்கும் பெண்ணை தேடும் மனம் வாய்த்தால் நீங்கள் தொண்ணூறுகளுக்கு முன்பு பிறந்தவர் தான். ஆமாம் அந்த காலத்து ஆளு தான்.

இயல்புநிலை திரும்பும் வரை விருந்தும், கொண்டாட்டங்களும் நிரம்பியதே புதுமண தம்பதிக்களுக்கு. விருந்துகளில் குலதெய்வ வழிபாடு என்பது தெய்வ நம்பிக்கை மிகுந்த குடும்பங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்று. அனைத்து சுபக்காரியங்களுக்கும் உத்தரவு பெறவும், காரியம் நிறைவேறியதற்க்கு நன்றி செலுத்துவதும் இயல்பான குடும்ப நிகழ்வு.

இத்தகைய ஒரு குடும்ப நிகழ்வை காண வாய்ப்பு கிடைத்தது. ஒரு வேன் நிறைய குடும்பத்தினரும் அவர்களுடன் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தம்பதிகளும் கோவிலுக்கு வந்தனர். வண்ணமயமான ஆடைகளுடன் குழந்தைகளும், சிறு பெண்களும் என ஆயிரம் வண்ணத்து பூச்சிகள் பறப்பது போல அழகு நிரம்பியது.

ஆலயத்தில்

தழைய தழைய கட்டிய இளம் நீல பட்டு சேலையில், தலைநிறைய பூவும், ஜொலிக்கும் நகைகளுடன் புதுப்பெண்ணும், ஆயுள் தண்டனை பெற்ற மாப்பிள்ளையும் இன்னும் அழகு சேர்த்தனர் அந்த கிராமத்து கோவில் வளாகத்திற்க்கு.

படையல் வைத்த பொங்கலை எல்லோரும் வெளுத்து கட்டும் நேரம், நம் ஹீரோவும், ஹீரோயினும் தனியே ஒரமாக வந்தனர். பிரசாதம் சாப்பிடத் தான். கொதிக்கும் பொங்கல் சூட்டில் இருந்து புது மனைவியின் கைகளை காக்க தன் கர்ச்சிப்பை கொடையாக அளித்தார்.

புதுமாப்பிள்ளை

பெண்ணிற்க்கு பொங்கல் ஊட்டி விட நினைத்தார், எடுத்த எடுப்பிலேயே பொங்கல் நடுவில் கை வைத்து கை சுட வேகமாக உதறும் அழகைக் கண்டு பெண் சிரிக்க, மாப்பிள்ளை நாணுவதும், இளையராஜா இசையமைக்க, வைரமுத்து பாட்டெழுத, பாரதிராஜா காட்சி அமைக்க வேண்டிய காட்சி. கேலி, காதல், வெட்கம், குறும்பு என அத்தன்னை உணர்வுகளும் பொங்கியது அவர்களது முகத்தில்.

பெண்ணின் அறிவுரை கேட்டு, ஆமாம் இப்பவே சொல் பேச்சு கேட்க ஆரம்பித்து விட்டார். இம்முறையும் பொங்கல் ஊட்ட முயற்சி செய்தார். சூடு பொறுக்காமல் பொங்கலை கீழே போட, அந்த பெண்ணின் முகபாவம், போயா நீயும் உன் பொங்கச் சோறும் என்பது போல இருந்தது. வாழ்க! தம்பதியர் எனும் வாழ்த்தோடு வேறு பக்கம் என் கவனத்தை திருப்பினேன்.

நாகரீக காதல் காட்சிகளான பைக் ரைட், காபி ஷாப் வழிசல்களே கண்டு களித்து போரடித்த கண்களுக்கு இந்த காட்சி பார்க்கவே அற்புதமாய் இருந்தது.

தினசரி வாழ்க்கையில் ஏற்படும் சலிப்புகளை சில நிமிடங்களில் காணும் நிகழ்வுகள் புரட்டிப் போடுகிறது. ரசிக்கும் மனம் இருந்தால் போதும் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ரசனைக்குரியது தான். இன்பமே துன்பமோ எல்லாமே அனுபவப்பாடங்கள் தான்.


Marriage tips in Tamil language for newly married couples.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.